Wednesday, December 13, 2006

சிங்கார சென்னை


சென்னை எழும்பூர் - காலை மணி 10


பேருந்தின் முன்னால் ஒரு குப்பை வண்டி செல்கிறது. அந்த வண்டியை மூடாமல் அப்படியே ஓட்டி செல்கின்றனர். சிக்னலுக்கு சிக்னல் மாமூலாக நிற்கும் போக்குவரத்து துறையும் கண்டுகொள்ள மாட்டேன் என்கிறது. சீறிப்பாய்ந்து வரும் இரு சக்கர வாகனங்க ஓட்டிகளின் மீது குப்பை அபிஷேகம் பண்ணிக்கொண்டு அலுவல் நேர திறந்த வெளி குப்பை லாரி பயணம் சிங்கார சென்னைக்கு ஒரு திருஷ்டிப் பொட்டு.



காசு கொடுத்து டிக்கெட் வாங்கிதான் பயணம் செய்கிறோம். மாநகர பேருந்துக்குள் கூட்ட நெரிசலில் நின்று கொண்டுதான் செல்ல இயலாது என்றால் உட்கார்ந்து கூட செல்ல முடியாது என்றே தோன்றுகிறது. பழைய இரும்புக்கு பேரிச்சை பழம் வாங்கி சாப்பிட்டு கொண்டே போக்குவரத்து துறை கொஞ்சம் யோசிக்கலாம்..



கீழ்ப்பாக்கம் – காலை 11 மணி


அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.. பிடி நழுவி வழுக்கி விழுந்து சக்கரத்தில் தலை மாட்டும் பொழுதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே….. ஏன்..எதற்கு இப்படி எல்லாம் பிரயாணம்?? எந்த கோட்டையை பிடிக்க? பேருந்து ஓவர்டேக் பண்ணும் போது இன்னொரு பேருந்துடன் கொஞ்சம் உராய்ந்தால் போதும், அப்புறம் எங்கே செல்லும் இந்த பயணம்.. யாரோ யாரோ அறிவாரோ???


கோடம்பாக்கம் மின்சார ரயில் - மதியம் 2 மணி
என்ன ஒரு ரம்மியமான குரல். பாடிக்கொண்டே பிச்சை எடுக்கும் இந்த மின்சார ரயில் பார்வையற்ற பாடகர்களின் குரலில் சில நேரம் ஸ்ரீனிவாஸை கூட காணலாம். 10 நிமிடம் செல்போன் ரேடியோவை அணைத்து இவர்களின் அந்த கால பாடல்களில் மனது லயித்துவிடும். இவர்களுக்கு கொடுக்கும் போது காசுக்கு பாரம் தெரிவதில்லை.


ஸ்பென்சர் பிளாஸா – மதியம் மணி 3


ஸ்பென்சரின் இரண்டாம் பகுதி இரண்டாம் தளத்தில் இருக்கிறது ஸ்ரீலங்கன் ட்ரேட் செண்டர். இங்கே ஆயுர்வேத மருந்துகள் மற்றும் பூச்சுகள் நிறைய இருக்கிறது. தலைவலிக்கு 10 ரூபாயில் 5 ரூபாய் நாணயம் அளவில் ஒரு களிம்பு தந்தார்கள். நன்றாகத்தான் இருந்தது. பற்பசை, சோப் என எல்லாமே ஆயூர்வேதம்தான். ஆயுர்வேதம் வேண்டுபவர்கள் தாரளமாக செல்லலாம்.


மவுண்ட் ரோடு - ஸ்பென்சர் எதிரில் – மதியம் மணி 4


நீங்க நல்லவரா கெட்டவரா ?? மாணவ பருவத்தில் உள்ளவர்களை பற்றி எழும்பும் கேள்வி இது. அதுவும் கல்லூரி பருவம் என்றால் ?? இவர்கள் நாளை கல்லூரியிலிருந்து வெளியேறி வேலை தேடி, குடும்பம் வளர்த்து, சில போராட்டங்களை சந்தித்து, வாழ்க்கையில் செட்டிலாகி, காரில் சென்று கொண்டிருக்கும் போது இது மாதிரியான காட்சியை காண நேரிட்டால்…?? அப்படியே மனது ‘ஞாபகம் வருதே..’ என்று ரீங்காரமிடும்…


திருவான்மியூர் – மாலை 5 மணி

இவ்வளவு சுத்தமாக சென்னையில் தெருக்கள் இருக்கின்றன. காஸ்ட்லி ஏரியா என்று சொல்கின்றனர். மற்ற கலீஸ் ஏரியாக்களை ஒப்பிடும் போது அவ்வளவு வித்தியாசம் இல்லை. தமிழர்கள் பஞ்சம் பிழைக்க செல்லும் நாடுகளான துபாய் மாதிரி ஊர்களில் இது மாதிரிதான் தெருக்கள் இருக்குமாம். இவ்வளவு குளுமையா பச்சை பசேலென்று இருப்பது சாத்தியமில்லை. இக்கரைக்கு அக்கரை பச்சை மாதிரி……………


மெரினா கடற்கரை – மாலை 6 மணி

கடற்கரை என்றாலே குதிரையேற்றம் இல்லாமலா?? காசு கொடுத்து குதிரை மீதேறி கொஞ்ச நேரம் உலா வந்தால் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்..இல்லையென்றால் குழந்தை மனதாக இருக்கும். கடற்கரையில் குதிரை காவலர்கள் இருப்பது வசதிதான். வழிப்பறி திருடர்களை ஓட்டி சென்று மடக்கி விடலாம். படத்தில் இருக்கும் இரண்டு குதிரைகள் அந்த கணத்தில் என்ன நினைத்து கொண்டிருக்கும் என்று யூகிக்க யாருக்கும் நேரமில்லை..கவலையில்லை..


அடையாறு பாலம் மாலை 7 மணி


சென்னையில் விளம்பர போர்டுகள் அதிகம். இப்பொழுதுள்ள தொழில் போட்டிகளின் விளைவாக நல்ல நல்ல கிரியேட்டிவான விளம்பரங்கள் காணக்கிடைகின்றன. இந்த விளம்பரத்தை பார்க்கும் எல்லோருக்கும் மறந்த ஏதாவது ஞாபகம் வந்தால் சரி...



தாம்பரம் ரயில் நிலையம் – இரவு மணி 8

சென்னை புறநகர் மின்சார ரயில்கள் நேரம் கடைபிடிப்பது உலக தரத்தில் இருக்கிறது. சொன்ன நேரத்திற்கு வருது, போவுது… அதே மாதிரி பொது மக்கள் பாதுகாப்பு விசயத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வது அவசியம்.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home