அரபு பத்திரிக்கை

இரண்டு நாட்கள் முன்பு தினமலரில் முதல் பக்கத்தில் ஒரு செய்தி
அரபு மண்ணில் சவூதியில் இருந்து மட்டுமே பத்திரிக்கைகள் வருகிறதாம். இதனால் அல் ஜசீரா அரபு மண்ணில் ஒரு பத்திரிக்கை துவங்குகிறதாம். துபாய்,அபுதாபி அரபு மண் இல்லையா. அங்கிருந்து சுமார் 10 பத்திரிக்கைகள் வெளிவருகின்றன.
கத்தார், ஓமன் எல்லாவற்றிலும் பத்திரிக்கை வெளிவருகிறது.. பாவம் ..இந்த தினமலர் நடத்துபவர்கள். ஒண்ணுமே தெரியாமல் எழுதுகிறார்கள். உலகம் தெரியாதவர்கள் எல்லாம் பத்திரிக்கை நடத்துகிறார்கள். அதையும் மக்கள் காசு கொடுத்து படிக்கிறார்களே..!!
தமிழ் இதழ்கள்
தமிழ் இதழ்கள் பிசினஸ் நடக்கணும்ங்கிறதுக்காக சில சமயம் முகப்பு அட்டையில் சூடாக தலைப்பு வைப்பார்கள். வாங்கி பார்த்தால், உள்ளே மேட்டர் வேறயா இருக்கும். அட இதற்கா காசு கொடுத்து வாங்கினோம் என்று தோன்றும். கிட்டத்தட்ட எல்லா வார பத்திரிக்கைகளும் இப்படித்தான் இருக்கின்றன. போட்டி அதிகமாகிவிட்டது, என்ன பண்றது. சில சமயங்களில் அவர்களின் காசு பார்க்க எழுதும் பரபரப்பு மேட்டர்களும் அவர்களுக்கே கூட பிடிக்காமல் எழுதலாம். சமீபத்தில் ஒரு வார பத்திரிக்கை, 'சாந்தி பெண்தானா?' என்ற தலைப்பில் ஊர் முழுக்க போஸ்டர் அடித்து அந்த வாரத்திற்கான இதழை விற்க விளம்பரம் தேடிக்கொண்டது. 'சாந்திக்கு நடந்த கொடுமை' அல்லது 'தமிழச்சி என்றால் இளக்காராமா?' என்று தலைப்பு வைத்திருக்கலாம்.
ஒரு பத்திரிக்கை நிருபர், தமிழக விளையாட்டுதுறை அமைச்சரிடம் 'சாந்தி சர்ச்சையில் இருக்க எப்படி நீங்கள் பணம் / டிவி பரிசு கொடுக்கலாம்?' என்று ஏகக்கடுப்பில் கேட்டிருக்கிறார். ஒரு நிருபராக தன் கடமையை கண்ணியமாக ஆற்றியிருக்கிறார். என்னத்த சொல்ல??
Labels: வியாபார இதழ்கள்
இம்சை அரசன் ஏர்டெல் பிரிபெய்டு
இப்ப எல்லோர் கையிலும் செல்போன் இருக்குது. அதிக அளவில் மக்கள் உபயோகிப்பது ஏர்டெல் பிரிபெய்டு கனெக்சன் என்று நினைக்கிறேன். சிக்னல் பிரச்சனை இல்லையென்றாலும், பல சமயங்களில் ஏர்டெல் நம்மை எரிச்சலடைய செய்கின்றன..
* பேலன்ஸ் எப்பவும் 40 ரூபாய்க்கு மேல் இருக்க வேண்டும். இல்லையென்றால் ஒவ்வொரு தடவை கால் பண்ணும் போதும் 'உங்கள் பேலன்ஸ் கம்மியா' இருக்கு என்று போட்டுக்கொடுக்கும். நாம் அவசரமாக போன் செய்ய வேண்டி இருக்கும். அது பாட்டுக்கு சாவகாசமாக 'உங்கள் போனில் பேலன்ஸ் 39 ரூபாய் 90 காசுகள் இருக்கு. உடனே டாப் அப் செய்யுங்க' என்று மெதுவாக சொல்லும். இம்சையப்பா.
* அடிக்கடி ஒரு எஸ்.எம்.எஸ் வரும், அதாவது அவரோட ஹிட்ஸ், இவரோட ஹிட்ஸ், வல்லவன் ஸ்பெஷல், நல்லவன் ஜோக்ஸ்.. அப்படி இப்படின்னு.. நம்முடைய பேலன்ஸே தடுமாறிக்கிட்டு இருக்கும் போது இது மாதிரி மெஸேஜ் பண்ணி, ஒரு டவுன்பஸ்லோடு 15 ரூபா, ஒரு நிமிடம் 6 ரூ, ஒரு மாதம் கட்டணம் 30 ரூபா, இண்டர்நெட் ஒரு நாளைக்கு 20 ரூபா என்று நம்மிடம் உள்ள பைசா எல்லாம் ஏர்டெல்லுக்கே போக வேண்டும் என்ற நப்பாசையில் அது அடிக்கடி கொடுக்கும் இம்சை இருக்கே.. தாங்காது..
* குறைந்த பட்ச ரீசார்ஜ் 200 ரூபாய், டாக் டைம் 4 ரூபாய், ஒரு மாதம் வேலிடிட்டி. அந்த 45 ரூபாயையும் அந்த ஒரு மாதத்தில் தினம் 2 ரூபாய் வாடகை கட்டணமாக (100 எஸ்.எம்.எஸ்க்கும் , கால் சார்ஜ் 50 பைசா பிளான்க்கும்) திரும்ப அவர்களிடமே போய்ச்சேரும். ஸோ, கண்டிப்பா நீங்க அதிலே அவுட் கோயிங் பண்ணனும்னா டாப் அப் போட்டுத்தான் ஆகணும்
* நாம் ஒரு நாள் தாமதமாக ரீசார்ஜ் செய்தால், அதாவது கிரேஸ் பீரியடில் இருந்தால், நம்மை விரோதி போல் பாவிப்பார்கள் பாவிகள்.. நமக்கு வரும் எஸ்.எம்.எஸ் எல்லாம் அரை நாள் அல்லது ஒரு நாள் தாமதமாகத்தான் வந்து சேரும். ஆனால் உடனே 1000த்து, 888 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யுங்க என்று அவங்க அனுப்பும் எஸ்.எம்.எஸ் மட்டும் உடனே நம்மை வந்து சேரும். 2,3 தடவை கால் செய்து மெஷின் நம்மிடம் ஞாபகம் மூட்டும்.
* ஏர்டெல்லில் யார் யாரெல்லாம் மார்க்கெட்டிங் ஆலோசகராக இருக்கிறார் என்று தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக அவர் இம்சை அரசனாகத்தான் இருப்பார்.
Labels: ஏர்டெல்
சிங்கார சென்னை
சென்னை எழும்பூர் - காலை மணி 10
பேருந்தின் முன்னால் ஒரு குப்பை வண்டி செல்கிறது. அந்த வண்டியை மூடாமல் அப்படியே ஓட்டி செல்கின்றனர். சிக்னலுக்கு சிக்னல் மாமூலாக நிற்கும் போக்குவரத்து துறையும் கண்டுகொள்ள மாட்டேன் என்கிறது. சீறிப்பாய்ந்து வரும் இரு சக்கர வாகனங்க ஓட்டிகளின் மீது குப்பை அபிஷேகம் பண்ணிக்கொண்டு அலுவல் நேர திறந்த வெளி குப்பை லாரி பயணம் சிங்கார சென்னைக்கு ஒரு திருஷ்டிப் பொட்டு.

காசு கொடுத்து டிக்கெட் வாங்கிதான் பயணம் செய்கிறோம். மாநகர பேருந்துக்குள் கூட்ட நெரிசலில் நின்று கொண்டுதான் செல்ல இயலாது என்றால் உட்கார்ந்து கூட செல்ல முடியாது என்றே தோன்றுகிறது. பழைய இரும்புக்கு பேரிச்சை பழம் வாங்கி சாப்பிட்டு கொண்டே போக்குவரத்து துறை கொஞ்சம் யோசிக்கலாம்..
கீழ்ப்பாக்கம் – காலை 11 மணி

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.. பிடி நழுவி வழுக்கி விழுந்து சக்கரத்தில் தலை மாட்டும் பொழுதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே….. ஏன்..எதற்கு இப்படி எல்லாம் பிரயாணம்?? எந்த கோட்டையை பிடிக்க? பேருந்து ஓவர்டேக் பண்ணும் போது இன்னொரு பேருந்துடன் கொஞ்சம் உராய்ந்தால் போதும், அப்புறம் எங்கே செல்லும் இந்த பயணம்.. யாரோ யாரோ அறிவாரோ???
கோடம்பாக்கம் மின்சார ரயில் - மதியம் 2 மணி 
என்ன ஒரு ரம்மியமான குரல். பாடிக்கொண்டே பிச்சை எடுக்கும் இந்த மின்சார ரயில் பார்வையற்ற பாடகர்களின் குரலில் சில நேரம் ஸ்ரீனிவாஸை கூட காணலாம். 10 நிமிடம் செல்போன் ரேடியோவை அணைத்து இவர்களின் அந்த கால பாடல்களில் மனது லயித்துவிடும். இவர்களுக்கு கொடுக்கும் போது காசுக்கு பாரம் தெரிவதில்லை.
ஸ்பென்சர் பிளாஸா – மதியம் மணி 3

ஸ்பென்சரின் இரண்டாம் பகுதி இரண்டாம் தளத்தில் இருக்கிறது ஸ்ரீலங்கன் ட்ரேட் செண்டர். இங்கே ஆயுர்வேத மருந்துகள் மற்றும் பூச்சுகள் நிறைய இருக்கிறது. தலைவலிக்கு 10 ரூபாயில் 5 ரூபாய் நாணயம் அளவில் ஒரு களிம்பு தந்தார்கள். நன்றாகத்தான் இருந்தது. பற்பசை, சோப் என எல்லாமே ஆயூர்வேதம்தான். ஆயுர்வேதம் வேண்டுபவர்கள் தாரளமாக செல்லலாம்.
மவுண்ட் ரோடு - ஸ்பென்சர் எதிரில் – மதியம் மணி 4


நீங்க நல்லவரா கெட்டவரா ?? மாணவ பருவத்தில் உள்ளவர்களை பற்றி எழும்பும் கேள்வி இது. அதுவும் கல்லூரி பருவம் என்றால் ?? இவர்கள் நாளை கல்லூரியிலிருந்து வெளியேறி வேலை தேடி, குடும்பம் வளர்த்து, சில போராட்டங்களை சந்தித்து, வாழ்க்கையில் செட்டிலாகி, காரில் சென்று கொண்டிருக்கும் போது இது மாதிரியான காட்சியை காண நேரிட்டால்…?? அப்படியே மனது ‘ஞாபகம் வருதே..’ என்று ரீங்காரமிடும்…
திருவான்மியூர் – மாலை 5 மணி

இவ்வளவு சுத்தமாக சென்னையில் தெருக்கள் இருக்கின்றன. காஸ்ட்லி ஏரியா என்று சொல்கின்றனர். மற்ற கலீஸ் ஏரியாக்களை ஒப்பிடும் போது அவ்வளவு வித்தியாசம் இல்லை. தமிழர்கள் பஞ்சம் பிழைக்க செல்லும் நாடுகளான துபாய் மாதிரி ஊர்களில் இது மாதிரிதான் தெருக்கள் இருக்குமாம். இவ்வளவு குளுமையா பச்சை பசேலென்று இருப்பது சாத்தியமில்லை. இக்கரைக்கு அக்கரை பச்சை மாதிரி……………
மெரினா கடற்கரை – மாலை 6 மணி 
கடற்கரை என்றாலே குதிரையேற்றம் இல்லாமலா?? காசு கொடுத்து குதிரை மீதேறி கொஞ்ச நேரம் உலா வந்தால் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்..இல்லையென்றால் குழந்தை மனதாக இருக்கும். கடற்கரையில் குதிரை காவலர்கள் இருப்பது வசதிதான். வழிப்பறி
திருடர்களை ஓட்டி சென்று மடக்கி விடலாம். படத்தில் இருக்கும் இரண்டு குதிரைகள் அந்த கணத்தில் என்ன நினைத்து கொண்டிருக்கும் என்று யூகிக்க யாருக்கும் நேரமில்லை..கவலையில்லை..
அடையாறு பாலம் மாலை 7 மணி
சென்னையில் விளம்பர போர்டுகள் அதிகம். இப்பொழுதுள்ள தொழில் போட்டிகளின் விளைவாக நல்ல நல்ல கிரியேட்டிவான விளம்பரங்கள் காணக்கிடைகின்றன. இந்த விளம்பரத்தை பார்க்கும் எல்லோருக்கும் மறந்த ஏதாவது ஞாபகம் வந்தால் சரி...
தாம்பரம் ரயில் நிலையம் – இரவு மணி 8

சென்னை புறநகர் மின்சார ரயில்கள் நேரம் கடைபிடிப்பது உலக தரத்தில் இருக்கிறது. சொன்ன நேரத்திற்கு வருது, போவுது… அதே மாதிரி பொது மக்கள் பாதுகாப்பு விசயத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வது அவசியம்.
Labels: சென்னை ஒரு நாள்